Tuesday, June 24, 2008

குமரி முஸ்லிம் வலைப்பூவிற்கு வரும் மிரட்டல்கள்

ஏக இறைவனின் திருப்பெயரால்..

குமரி முஸ்லிம் வலைப்பூவில் பதியப்படும் கருத்துக்கள் சிலருக்கு சரியாக தெரியலாம், சிலருக்கு வெறுப்பூட்டலாம். இவர்கள் தவறான கருத்தை பரப்பியுள்ளனர் என்றுகூட சிலருக்கு தோன்றலாம். அப்படி நினைப்பவர்கள் நாகரீகமான முறையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலும் அதை எடுத்து வைத்தால் நிச்சயமாக குமரி முஸ்லிம் வலைப்பூ தன்னை திருத்திக் கொள்ளும் இன்ஷா அல்லாஹ். ஆதாரங்களுடன் நாகரீகமற்ற முறையில் எடுத்து வைத்தாலும் இன்ஷா அல்லாஹ் தனது தவறை அது திருத்திக் கொள்ளும். ஆனால் எதுபோன்றதொரு நாகரீகமற்ற வார்த்தைகளை குமரி முஸ்லிம் வலைப்பூவை நோக்கி சுட்டிக்காட்டுபவர் பயன்படுத்துகிறாரோ அது குமரி முஸ்லிம் வலைப்பூவாக இல்லாதபட்சத்தில் அது சுட்டிக்காட்டியவரை நோக்கியே திரும்பும். இந்நிலைக்கு குமரி முஸ்லிம் வலைப்பூ அதிக முக்கியத்துவம் கொடுக்கும்.

குறிப்பிட்டு சொல்வதாக இருந்தால் திராவிடர் கழக கூட்டத்தில் த.மு.மு.க-வினரும் கலந்து கொண்டனர் என்ற ஒரு செய்தியை நோட்டீஸ் ஆதாரங்களுடன் யூதர்களும் நாங்களும் ஒன்று – தமுமுக என்ற தலைப்பில் குமரி முஸ்லிம் வலைப்பூ பதிந்திருந்தது. ஆனால் திராவிடர் கழகம், த.மு.மு.க-வின் அனுமதி பெறாமலேயே த.மு.மு.க-வின் பெயரை நோட்டீஸில் போட்டிருக்கிறார்கள் என்ற செய்தி ஒருவரால் அறிய வந்ததும் உடனே குமரி முஸ்லிம் வலைப்பூ தனது தவறை திருத்திக்கொண்டது. அந்த பதிவிலிருந்து குறிப்பிட்ட அந்த செய்தியை நீக்கியும் கொண்டது. நாங்கள் போட்டால் போட்டதுதான் என்று குமரி முஸ்லிம் பிடிவாதம் பிடிக்கவில்லை. இப்படி ஒரு தவறு சுட்டிக்காட்டிய பிறகு அது குமரி முஸ்லிம் வலைப்பூவால் சரி செய்யப்பட்டும், அதற்கான விளக்கம் தரப்பட்ட பிறகும்கூட வேண்டுமென்றே நாகரீகமற்ற முறையில் சிலர் நடந்து வருகிறார்கள். இதை அவர்கள் தொடர்ந்து செய்வார்கள் எனில் அவர்களை குமரி முஸ்லிம் வலைப்பூ அவர்களுடைய பாணியிலேயே எதிர் கொள்ளும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.


ஒரு சகோதரனிடம் ஏற்படும் தவறை சுட்டிக்காட்டுவது நல்ல சகோதரனின் அடையாளம் என்று சொல்லும் சிலர் அதை பகிரங்கமாக சொல்லக்கூடாது எனவும் சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்கள் குமரி முஸ்லிம் வலைப்பூ பற்றிய தங்களது விமர்சனத்தை மின்னஞ்சல் வழியாகவோ அல்லது மறுமொழியிட்டோ தெரியப்படுத்திடவில்லை. அவர்களும் பகிரங்கமாகவே வெளியிட்டிருக்கிறார்கள். இப்படி வெளியிட்டுவிட்டு புறம் பேசுவது இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்பதற்கு சமம் என்ற இறைவசனத்தை வேறு மேற்கோள் காட்டி அறிவுரை செய்கிறார்கள்.

இந்த இறைவசனத்தை நன்கறிந்த அச்சகோதரர்கள் இப்படி பகிரங்கமாக குமரி முஸ்லிம் வலைப்பூவைப்பற்றி புறம் பேசுவதற்கு என்ன நியாயம் சொல்கிறார்களோ, அதே நியாயத்தை குமரி முஸ்லிம் வலைப்பூவும் சொல்வதற்கு உரிமை உண்டு. குமரி முஸ்லிம் வலைப்பூ சமுதாயத்திற்கு எதிராகவும், மார்க்கத்திற்கு எதிராகவும் நடந்து கொள்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள். அப்படி கருதுவதனால்தான் அதுபற்றி வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள். அப்படி வெளிப்படையாக விமர்சிப்பது தனது இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்பதற்கு சமம் என்று அவர்கள் கருதவில்லை. ஆனால், சிலர் சமுதாயத்திற்கு எதிராகவும், மார்க்கத்திற்கு எதிராகவும் செய்யும் தவறுகளை ஆதாரங்களுடன் மக்களுக்கு அடையாளம் காட்டும் பணியை குமரி முஸ்லிம் செய்தால் அது மட்டும் புறம், இறந்த சகோதரனின் மாமிசம் என்று முத்திரையை குத்த முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில் நாங்கள் நடுநிலைவாதிகள் என்ற பகட்டான ஆடையை வேறு அணிந்து கொள்கிறார்கள்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய அமைப்புக்களில் த.த.ஜ செய்கின்ற தவறுகளை மட்டும் வலைப்பூக்களில் பதிந்தால் நாங்கள் வாய்மூடி ரசிப்போம். த.த.ஜ அல்லாத மற்ற இயக்கங்கள் செய்யும் தவறுகளை ஆதாரங்களுடன் யாரும் வெளியிட்டால் அவர்களை அசிங்கமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்வோம். பி.ஜே யானிகள் என்று முத்திரை குத்துவோம். தொலைத்துவிடுவேன் என்று மிரட்டுவோம். இதுதான் நீங்கள் கூறும் நடுநிலையின் அளவுகோல் என்றால் அந்த நாசமாய் போன நடுநிலையை குமரி முஸ்லிம் வலைப்பூ கண்டு கொள்ளவே செய்யாது. அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பவர்கள், நாங்களும் நடுநிலையாளர்கள் என்று சொல்வதை மறுபரிசீலனை செய்யுங்கள். நடுநிலை என்ற சொல்லை கொச்சைப்படுத்த முயற்சிக்காதீர்கள்.

த.மு.மு.க, ஜாக் மற்றும் இன்னபிற அமைப்புக்களின் ஏராளமான தவறுகளில் மிகச் சிலவற்றை சுட்டிக்காட்டிய உடனேயே குமரி முஸ்லிம் வலைப்பூவை எப்படியேனும் முடக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு சிலர் கதறுகிறார்கள். வானத்திற்கும், பூமிக்கும் குதிக்கிறார்கள். இது ஒரு த.த.ஜ-வின் ஆதரவு வலைப்பூ என்ற புலம்பல் படுஜோராக பரப்பப்பட்டு வருகிறது. அதை ஒருபோதும் மறுப்பதற்கு இல்லை. ஆனால், குமரி முஸ்லிம் வலைப்பூ எங்கேனும் த.த.ஜ-வின் தவறுகளுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறதா என்று அவர்கள் யோசிப்பதில்லை. த.த.ஜ செய்த தவறுகளுக்கு வியாக்கியானங்கள் தந்து அதை நியாயப்படுத்தியிருக்கிறதா என்றுகூட அவர்கள் புரிந்து கொள்ள தயாராக இல்லை. அந்தளவிற்கு மூளை கழுவப்பட்டவர்களாக இருந்து கொண்டு அடுத்தவர்களை பார்த்து பழிப்பது ஒரு வகை வியாதியாகி விட்டது இவர்களுக்கு.

தமிழகத்தில் பிரபலமாக இருக்கின்ற முஸ்லிம் அமைப்புக்களான TNTJ, TMMK, MNP போன்ற அமைப்புக்களில் TNTJ-வை குமரி முஸ்லிம் வலைப்பூ முதல் தரத்தில் வைத்து பார்க்கிறது. அது குமரி முஸ்லிம் வலைப்பூவின் உரிமை. இதில் எதிர் கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை. அப்படி எதிர் கேள்வி கேட்பவர்களாக யாரும் இருந்தால் குமரி முஸ்லிம் வலைப்பூவின் தொடர் கேள்விகளை அவர்களும் எதிர்கொள்வதுதான் நியாயம். ஏனெனில், அப்படி கேள்வி கேட்பவர்களோ, அல்லது அவர்களுடைய கட்சியோ எந்த நிலையிலும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவே மாட்டார்கள்.

குமரி முஸ்லிம் வலைப்பூ TNTJ - வை முதல் தரத்தில் வைத்து பார்ப்பதால் அதைப்பற்றி விமர்சிக்காது என்று பொருள் அல்ல. அதையும் விமர்சிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் அது தன்னை அடையாளப்படுத்தாமல் இருந்தது. TNTJ நிர்வாகிகளிடம் இருக்கும் தவறுகளை பூசி மொழுகி நியாயப்படுத்தும் வேலையை நிச்சயமாக குமரி முஸ்லிம் வலைப்பூ செய்யாது. TNTJ-வை மட்டுமே விமர்சிப்போம் என்ற கொள்கையில் இருப்பவர்கள் தங்கள் தங்களின் தலைமையை விமர்சிக்க தயாரா? நடுநிலை வேஷத்தை களைந்து விட்டு இதற்கு விடையளியுங்கள்.

TNTJ-வைப்பற்றியும் அதில் உள்ளவர்களைப் பற்றியும் விமர்சிக்க பல்வேறு வலைப்பூக்கள் இருந்து வருகிறது. அவ்வாறு செயல்படுகின்ற வலைப்பூக்கள் செய்கின்ற அத்துமீறல்களாலும், அநாகரீக வார்த்தைகளாலும் சிந்தனையாளர்களின் பார்வையில் மிக கீழ்தரமான மதிப்பை அவைகள் பெற்றுள்ளன. போரட்ட களத்திற்கு வரும் பெண்களை கீழ்த்தரமாக விமர்சிப்பது, மார்க்க சொற்பொழிவு கேட்க வரும் பெண்களை கீழ்த்தரமாக விமர்சிப்பது. அதில் ஏதேனும் ஒரு பெண் நமக்கு உறவினராககூட இருக்கலாம் என்ற நல்லபிப்ராயம் கூட வைக்காமல் தாறுமாறாக தரம் தாழ்ந்து விமர்சிப்பது. பிற சகோதரர்களின் கண்ணியத்தோடு சர்வ சாதாரணமாக விளையாடுவது. நியாயமான முறையில் இறைவனுக்கு அஞ்சியவர்களாக தவறுகளை சுட்டிக்காட்டி உணர்த்த வேண்டும் என்ற கவலை அந்த வலைப்பூக்களை நடத்துபவர்களிடம் கிடையவே கிடையாது.

அவர்கள் எந்த கட்சியில் அல்லது அமைப்பில் இருக்கிறார்களோ அந்த அமைப்புக்களின் தவறுகளை அடுத்தவர்கள் சுட்டிக்காட்டிவிடக்கூடாது என்ற அச்ச உணர்வினால் முன்னெச்சரிக்கையாகவே அவர்கள் அந்த வலைப்பூக்களை நடத்தி வருகிறார்கள். தெளிவான வார்த்தைகளில் சொல்வதென்றால் தமிழகத்தில் இருக்கக்கூடிய த.மு.மு.க, மனித நீதி பாசறை மற்றும் த.மு.மு.க-வை முன்பு ஹராமென்று சொல்லிவிட்டு இப்பொழுது அதனோடு ஒட்டி உறவாடும் ஜாக் போன்ற அமைப்புக்கள் எழுதப்படாத ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொண்டு த.த.ஜ-வை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கில் கூட்டாக செயல்பட்டு வருகின்றன. இந்த உண்மை நிலையை அறிந்ததாலேயே குமரி முஸ்லிம் வலைப்பூ ஜனனித்தது.

யார், யாரோ செய்த காரியங்களை நினைவில் வைத்துக்கொண்டு குமரி முஸ்லிம் வலைப்பூ மீது அவதூறு சுமத்துவது அறிவுடைமையாக இருக்காது. குமரி முஸ்லிம் வலைப்பூ கீழ்த்தரமான வேலை செய்கிறது என்று சொல்பவர்கள் அதை முதலில் நிரூபியுங்கள். பிறகு குமரி முஸ்லிம் வலைப்பூவிற்கு எச்சரிக்கை விடுங்கள். மிரட்டுங்கள். குமரி முஸ்லிம் வலைப்பூவை மிரட்டுபவர்கள், அதற்கு எச்சரிக்கை செய்பவர்கள் உங்கள் வலைப்பூவை எதற்காக வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாங்கள் அப்படி செய்து விடுவோம், இப்படி செய்து விடுவோம் என்ற கோஷங்கள் தேவையில்லை. உங்களால் முடிந்ததை செய்யுங்கள். உங்களுடைய வார்த்தைகள் நியாயமாக, நாகரீகமாக இருக்கும் பட்சத்தில் அதை குமரி முஸ்லிம் வலைப்பூவும் ஆதரிக்கும். ஆனால் நீங்கள் செய்வது மார்க்கத்திற்கும், சமுதாயத்திற்கும் துரோகம் என்ற பட்சத்தில், நீங்கள் என்ன, அது யாராக இருந்தாலும் குமரி முஸ்லிம் வலைப்பூ ஒரு கை பார்க்கும்.

அதுபோல, ஒருவரைப்பற்றிய குற்றச்சாட்டுக்களை, வருடக்கணக்கில் சுற்றலில் விட்ட செய்தியை எடுத்து வந்து அதையே நீயும் போடு என்று குமரி முஸ்லிம் வலைப்பூவிடம் மல்லுக்கு நிற்பது எந்த வகையிலும் நியாயமில்லை. தான் எது செய்ய வேண்டும், எது செய்யக்கூடாது என்று தீர்மானிக்கும் உரிமை மற்றவர்களைவிடவும் குமரி முஸ்லிம் வலைப்பூவிற்கே உண்டு. அதை யாரும் நிர்பந்தப்படுத்தக் கூடாது. நிர்பந்தப்படுத்தவும் முடியாது.

குமரி முஸ்லிம் வலைப்பூ செய்யும் காரியத்தில் தவறுகளை சுட்டிக்காட்டும் உரிமை பார்வையாளர்கள் அனைவருக்கும் இருக்கிறது. சுட்டிக்காட்டல் நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் அதை ஏற்று திருத்திக்கொள்ளும் பக்குவமும், நெஞ்சுறுதியும் அல்லாஹ்வின் கருணையால் குமரி முஸ்லிம் வலைப்பூவிற்கு நிறையவே உண்டு. அதனால், மிக நிச்சயமாக குமரி முஸ்லிம் வலைப்பூ தனது காரியத்தை நிறுத்தவே நிறுத்தாது. அது தொடர்ந்து தனது காரியத்தை செய்யும். யாரும் யாரையும் அதை நிறுத்து, இதை நிறுத்து என்று கட்டளையிடுவது நாகரீகமான செயல் அல்ல. குர்ஆன் மற்றும் சுன்னாவை முன்னிறுத்திய சுட்டிக்காட்டல்களால் மட்டுமே குமரி முஸ்லிம் வலைப்பூவை பணிய வைக்க முடியும். அநாகரீக வார்த்தைகளால் அர்ச்சனை செய்தவர்களும், குமரி முஸ்லிம் வலைப்பூவை மிரட்டிவிட்டோம் என்று தமக்குள்ளேயே மகிழ்பவர்களும் இதை ஒருமுறைக்கு இருமுறை படித்துக்கொள்ளுங்கள்.

No comments: