Monday, February 16, 2009

எம்.ஐ.சுலைமான் பீ.ஜே - ன் கைத்தடியா!


ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...


இயக்கங்கள் பிரியும் போது வசைபாடுவது வாடிக்கை. த.த.ஜ அதில் விதிவிலக்கு என எண்ணியிருந்தோம். ஆனால், பாக்கருக்கு பீ.ஜே விடுத்த அறைகூவலில் பாக்கருடன் இருப்பவர்களை 'கைத்தடிகள்' என்று உணர்வில் வர்ணித்துள்ளார் பீ.ஜே. அதுபோல அதற்கு முந்தைய இதழில் அந்த சகோதரர்களை 'எடுபிடிகள்' என்று கூறியிருந்தார். தவ்ஹீத் ஜமாஅத்திற்கென்று ஒரு தனித்தன்மை இருப்பதாக எண்ணியவர்களுக்கெல்லாம் அது ஒரு தலைக்குனிவை ஏற்படுத்தியது. அனைத்து இயக்கங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இதற்கு த.த.ஜவும் விதிவிலக்கல்ல என்பதையே இது காண்பித்தது.


எம்.ஐ.சுலைமானை பீ.ஜேயின் எடுபிடி என்று யாரேனும் சொன்னால் பீ.ஜே-யோ எம்.ஐ.சுலைமானோ அல்லது த.த.ஜ அமைப்பினரோ ஒத்துக் கொள்வார்களா?

'பீஜேயின் கைத்தடிகளான சம்சுல்லுஹாவும் சைபுல்லா ஹாஜாவும்' என்று யாராவது கூறினால் பீ.ஜே மற்றும் த.த.ஜவினர் ஏற்றுக் கொள்வார்களெனில் இதுவும் தவறல்ல. குற்றச்சாட்டுகளை கூறலாம், விமர்சிக்கலாம். ஆனால் இதுபோன்ற தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்த இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பது தான் இஸ்லாமிய சகோதரர்களின் நம்பிக்கை. நாம் நபிவழியை பின்பற்றுபவர்கள். கழுத்தில் துண்டை போட்டு இறுக்கிய போது கூட நபி(ஸல்) அவர்கள் கோபப்படாமல் பொறுமையோடு இருந்தார்கள். ஆட்டிறைச்சியில் விஷத்தை தடவி கொடுத்த யூதப்பெண்ணைக் கூட நபி(ஸல்) அவர்கள் மன்னித்தார்கள் என்று மேடைக்கு மேடை கூறும் பீ.ஜே, இவ்வாறு கூறியது த.த.ஜ சகோதரர்களுக்கு மத்தியிலும் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அபுபக்கர் (ரலி) அவர்களுக்கும் இன்னொருவருக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட்ட போது எதிராளி அபுபக்கரை திட்டிய போது நபி(ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டே இருந்தார்கள். பதிலுக்கு பதிலாக அபுபக்கர் அவரை திட்டிய போது நபி(ஸல்) அவர்கள் கோபத்துடன் சென்று விட்டார்கள். அதுபற்றி அபுபக்கர்(ரலி) கேட்டபோது, அவர் உம்மை திட்டும் போது மலக்குகள் உம்மோடு இருந்தனர். நீர் அவரை திட்டும் போது ஷைத்தான் உம்மோடு இருந்தான் என நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அழைப்பு பணியில் ஈடுபட்டு தமிழகத்துக்கு தவ்ஹீத் சிந்தனை வர முக்கிய காரணமாக இருந்த பீ.ஜே பொறுமையிழந்தது கண்டிக்கத்தக்கது. அவசரப்பட்டு, அறியாமையினால் பாக்கருடன் சென்றுவிட்டவர்கள், த.த.ஜவை விளங்கி த.த.ஜவில் இணைவதையும் இது தடுக்கும்.

ஆனால் அதே வேளையில் பாக்கர் வெளியேற்றப்பட்டதால் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நன்மைகள் கிடைத்ததோ இல்லையோ பாக்கருக்கு ஏராளமான பலன்கள் கிடைத்துள்ளன.

இசை ஹராமல்லவா எனக்கேட்டபோது காலிங்பெல் இசையல்லவா, டெலிபோண் இசையல்லவா இதெல்லாம் ஹராம் என்று சொல்ல முடியுமா? என விதண்டாவாதம் செய்த பாக்கர், மனதை மயக்கும் இசைதான் ஹராம் என்று சொன்னதாக கேள்விப்பட்டோம். த.த.ஜ விலிருந்து வெளிவந்ததும் பாக்கருடைய நிகழ்ச்சிகளில் ஆட்டமும் பாட்டும் ஒளிபரப்படுகின்றன. த.த.ஜவில் இருக்கும்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பாக்கருக்கு இப்போது விடுதலை கிடைத்துள்ளது. இது ஒரு பலன். இது மனதை மயக்கவில்லையா என்பது பாக்கருக்கே வெளிச்சம்.


அடுத்ததாக, த.த.ஜ நிகழ்ச்சிகளுக்கிடையே சினிமா பாடல்களையும் ஆபாச காட்சிகளையும் ஒளிபரப்ப த.த.ஜ அனுமதிக்க மறுத்தது. ஆனால் இன்று சுதந்திரமாக பாக்கரால் தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கிடையில் சினிமா மற்றும் ஆபாச பாடல் காட்சிகளை ஒளிபரப்ப முடிகிறது. இதுவும் பாக்கருக்கு ஒரு லாபம். ஆபாசத்தை வெறுத்து, தொலைக்காட்சியே வேண்டாம் என இருந்தவர்கள் கூட விண் டிவியில் த.த.ஜ நிகழ்ச்சிகளை கண்டுவந்தனர். அந்த நிகழ்ச்சியில் கூட இப்போது ஆபாசத்தை புகுத்தி விட்டார் பாக்கர்.

விண் டிவியில் பாக்கர் நிகழ்ச்சிகளுக்கிடையில் ஆபாச பாடல் காட்சிகள்













அவ்வாறு நாங்கள் ஆபாச காட்சிகள், பாடல்கள் எதையும் ஒளிபரப்பவில்லை என பாக்கர் கூறுவாரானால் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பப்பட்ட அன்றைய நிகழ்ச்சிகள் முழுவதையும் நாங்கள் வெளியிட தயார்.

அடுத்ததாக வின் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தமுமுகவின் விளம்பரம். பாக்கர் த.த.ஜவில் இருக்கும்போது தமுமுகவின் விளம்பரத்தை போட முடியவில்லை. எனவே இன்று வெளியேற்றப் பட்டதால் தான் அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் ஒருபோதும் அரசியலில் பங்கு பெற மாட்டோம் என்று மக்களிடம் சத்தியம் செய்த தமுமுகவின் அரசியல் கட்சி மாநாட்டுக்கான விளம்பரத்தை ஒளிபரப்ப முடிந்தது. இதுவும் பாக்கருக்கு ஒரு லாபம்.

நடிகர் டி.ராஜேந்தரை பாக்கர் த.த.ஜ மேடையில் ஏற்றியதால் கண்டிக்கப்பட்டதை தொடர்ந்து அன்றோடு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. த.த.ஜவிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதால் இன்று பாக்கருக்கு பல அரசியல்கட்சிகளுடன் கைகோர்க்க முடிகிறது. இதுவும் ஒரு லாபம்.


வெளியே வந்தவுடன் ஒருவர் தாறுமாறாக செயல்படுகிறார் என்றால் அவரை எந்தஅளவுக்கு த.த.ஜ கட்டுபடுத்தி வைத்திருந்துள்ளது என்பது நமக்கு விளங்குகிறது. தற்போது ஒரு இலக்கின்றி கொள்கையின்றி பாக்கர் செயல்படுவதை பார்க்கும் போது நமக்கு த.த.ஜவின் மீதான மதிப்பு முன்பைவிட அதிகரிக்கிறது.


பல அமைப்புகள் உடைய பீ.ஜே காரணமாகி விட்டாரே, பாக்கர் நீக்கப்பட்டது அநியாயமோ, யாரையுமே நம்ப முடியவில்லையே! இனி நமக்கு எந்த அமைப்புமே வேண்டாம் என முடிவு எடுத்தவர்களை, ஜூனியர் விகடனில் பாக்கர் அளித்த பேட்டி, த.த.ஜவில் முன்பைவிட வீரியத்துடன் செயல்படும் படி செய்துவிட்டது.


அந்த தகவல் இதுதான்...

//என்னை மட்டுமல்ல, 'நஜாத்' பத்திரிகையை நடத்திவந்த அபு அப்துல்லாவையும் இப்படி பொய்க்குற்றம் சாட்டி வெளியேற்றினார்கள். சுனாமி பணத்தைச் சுருட்டியதாக த.மு.மு.க-வைச் சேர்ந்த ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, லஸ்கர்-இ-தொய்பா அமைப்போடு தொடர்பு வைத்திருந்தார் என்று அமீன் பக்ரி ஆகியோரையும் இப்படித்தான் இயக்கத்தை விட்டு வெளியே அனுப்பினார் ஜெயினுல் ஆபிதீன்!'என்றார் பாக்கர்.//

பாக்கர் கூறியிருப்பது உண்மையானால், பாக்கர் ஒரு பொய்யர் என்பது ஊர்ஜிதமாகிறது. தன்னை வளர்ப்பதற்காக அல்லது தன்னுடைய இயக்கத்தை வளர்ப்பதற்காக பாக்கர் அநியாயமாக அபுஅப்துல்லாஹ் மீது இதுநாள்வரை அவதூறு கூறி இருந்திருக்கிறார். பீ.ஜேயுடன் இருந்து கொண்டு பீ.ஜே சொன்ன பொய்யான பொருளாதார குற்றச்சாட்டுகளையெல்லாம் எதிர்க்காமல் உடந்தையாக இருந்திருக்கிறார். பதவி மோகத்தால் அனைத்தையும் மறைத்திருக்கிறார். அன்றைய தினமே செயலாளர் பதவியை தூக்கி எறிந்து விட்டு வெளியேறி இருந்தால் பாக்கரின் மதிப்பு எங்கேயோ உயர்ந்திருக்கும். அது அவதூறாக இருந்தால் பி.ஜேயும் இனங்காட்டப் பட்டிருப்பார். மாற்றமாக, இன்று வெளியேற்றப்பட்டவுடன் கூறுகிறார் எனில், இது உண்மையில்லை என்று தான் முடிவு செய்ய முடியும். பாக்கர் எதையாவது பேசி வம்பில் மாட்டுவதை விட மௌனமாக இருப்பது சிறந்தது.

யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருக்கிறாரோ அவர் நல்லதையே பேசட்டும் அல்லது வாய்மூடி மௌனமாக இருக்கட்டும்.

அறிவிப்பவர் : அபுஹூரைரா, நூல் : முஸ்லிம்