Thursday, July 3, 2008

நபி வழியை புறக்கணிக்கும் ஜாக்கின் கமாலுதீன்!

இக்கட்டுரையின் முதல் பாகத்தை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

ஜாக் தலைவர் கமாலுத்தீன் அவர்கள் தனது பெருநாள் உரையில் பெருமானாரின் கூற்றை மறுத்து விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி பாவத்தை அவருடைய கணக்கில் சேர்த்துக் கொண்டிருந்தார்.

அவருடைய பெருநாள் உரையில் சிலதை பாருங்கள்.

இஸ்லாத்தில் ஃபஜ்ர் தொழுகை, லுஹர் தொழுகை என 5 நேர தொழுகைகள் உண்டு. திடல் தொழுகை என்று ஒன்று உண்டா? எங்கு வேண்டுமானாலும் தொழலாம். இடம் முக்கியமல்ல, ஈமான்தான் முக்கியம்! இவர்களுக்கு (த.த.ஜ) திடலில்தான் தொழவேண்டும் என்றிருந்தால் கப்ரு வணங்கிகள் பாவாகாஸிம் ஒலியுல்லா பள்ளியில் திடலில் தானே தொழுகிறார்கள். அங்கே போய் தொழவேண்டியது தானே? நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிவாசல் சிறியதாக இருந்தது. எனவே திடலில் தொழுதார்கள். இப்போதெல்லாம் பள்ளிவாசல்கள் விசாலமாக இருக்கிறதல்லவா? பின்பு ஏன் திடலில் தொழ வேண்டும்? இப்படி கமாலுத்தீன் பேசினார் என்பதற்கு அன்று அஷ்ரப் பள்ளியில் தொழுத அனைவரும் சாட்சி.
அவர் அவருடைய பெருநாள் உரையில் இப்படி பேசியதற்கு அவருடைய அல் ஜன்னத் மாத இதழில் அவரே வேறு வார்த்தைகளில் கொடுத்த வாக்குமூலத்தை பாருங்கள்.

கேள்வி : கன்னியாகுமரி மாவட்டத்தில் த.த.ஜ ஜமாஅத்தினர் திருநபிவழியில் திடல் தொழுகை என்று ஒரு விளம்பரம் செய்திருந்தனர். இந்த பெயரில் ஒரு தொழுகை உண்டா?

பதில் : இஸ்லாத்தில் பல பெயர்களில் தொழுகை உள்ளது.பர்ள் தொழுகை, சுன்னத் தொழுகை,...ஆனால் திடல் தொழுகை என்று ஒரு பெயரில் தொழுகை இல்லை.(நவூதுபில்லாஹ்) இந்த பெயரில் ஒரு தொழுகையை நபி(ஸல்)அவர்கள் அறிமுகப்படுத்தவுமில்லை.இது நாமோ நமக்கு முன்னிருந்த நல்லோர்களோ கேட்டிராத ஒரு பெயர்,இது போன்ற புதுமை பெயர்களைக்கூறி மக்களிடையில் சிலர் பிரபலமாக நினைத்து அப்படி செய்திருக்கலாம்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ஜாக் தலைவர் கமாலுத்தீன் அவர்கள் பொதுவான கேள்விகளுக்கு பதில் தருவதற்கு முன்னால் கீழ்கண்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு பதில் தரட்டும்.

ஏக இறைவனை நேசிக்கக்கூடிய ஒரு முஸ்லிம், முஹம்மது நபி (ஸல்) அவர்களை அப்படியே பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றுபவரையே அல்லாஹ்வும் விரும்புவான், இன்னும் அவர்களுடைய பாவங்களையும் மன்னிப்பான்.

''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)

இருவேறு நபர்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடு வந்தால் அதற்கான தீர்வை நாடி குர்ஆன், சுன்னாவிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். கருத்து வேறுபாட்டிற்கான தீர்வை குர்ஆன் மற்றும் சுன்னா எடுத்தியம்பும் போது அதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பதையும் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். அப்படி அதை பின்பற்றாதவர்கள் நம்பிக்கையாளர்களே அல்ல என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது.

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)

புனித நகரம் மக்காவில் இருக்கும் மஸ்ஜிதுல் ஹராம் அல்லாது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மதீனாவில் இருக்கும் மஸ்ஜிதுந்நபவியில் தொழுவது ஆயிரம் மடங்கு நன்மை அதிகம் அளிக்கக்கூடியது.

ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட (மஸ்ஜிதுல் ஹராமை தவிர்த்து) எனது இந்த பள்ளி(மஸ்ஜிதுந் நபவி)யில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விட சிறந்ததாகும் (ஆதாரம் : புஹாரி)

மஸ்ஜிதுந்நபவியில் தொழுவது ஆயிரம் மடங்கு நன்மை அதிகம் என்று சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை அங்கு தொழாமல் திடலில் தொழுபவர்களாக இருந்தார்கள். மேற்கண்ட திருமறை வசனத்திற்கு (4:65) கட்டுப்பட்டவர்கள் கீழ்கண்ட நபி வழியை புறக்கணிக்க மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாளிலும், ஹஜ்ஜூப்பெருநாளிலும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையை துவக்குவார்கள்.

அறிவிப்பவர்: அபு ஸஹீத் அல் குத்ரி. நூல்: புகாரி 956

பெருநாள் தொழுகை என்பது திடலில்தான் தொழ வேண்டும் என்பதை மேற்கண்ட குர்ஆன், சுன்னாவைவிடவும் ஒருவர் தெளிவாக சொல்ல முடியாது. அறிவாளிகளுக்கும், சிந்தனை சக்தி உள்ளவர்களுக்கும் மேற்குறிப்பிட்ட குர்ஆன் மற்றும் சுன்னாவை உள்ளடக்கிய விளக்கம் தெளிவாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

இஸ்லாத்தில் 5 வேளை தொழுகைகள் உண்டு, திடல் தொழுகை என்று ஒன்று உண்டா என்று கேள்வி கேட்கும் ஜாக் தலைவர் கமாலுத்தீன் அவர்களே! மேற்கண்ட நபி வழி, திடல் தொழுகை என்று ஒன்று உண்டு என்றும் அத்தொழுகைக்கு மாதவிடாய் பெண்கள் உட்பட செல்ல வேண்டும் என்பதிலிருந்தும் அது வலியுறுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகி உள்ளது. திடல் தொழுகை என்று ஒன்று இல்லை என்று நீங்கள் சொன்னது மார்க்கத்தை நீங்கள் அறிந்திராத காரணத்தினாலா? அல்லது ஒரு ஜமாஅத்தினர் மீது கொண்ட தான்தோன்றித்தனமான வெறுப்பினாலா?

மார்க்கம் எனக்கொன்றும் அறியாமலில்லை, அதை நான் அறிந்தவன்தான். ஆனால் இந்த த.த.ஜ-காரர்களை ஒரு வழி பண்ணியே தீர வேண்டும் என்பதற்காகத்தான் மார்க்கத்தில் இருக்கும் ஒன்றை இல்லை என நான் சொன்னேன் என்று நீங்கள் சொல்வீர்களா? நீங்கள் சொல்கிறீர்களோ இல்லையோ, ஆனால் உங்களை அறிந்தவர்கள் உங்களை அப்படித்தான் பார்க்கிறார்கள். ஏனெனில் அல் ஜன்னத் இதழின் 2002 நவம்பர் இதழில் பக்கம் 24 மற்றும் 25-களில் நீங்கள் அப்படித்தான் சொல்லி இருக்கிறீர்கள்.

பெருநாள் தொழுகையை திறந்த வெளியில் தான் தொழவேண்டும். நபி(ஸல்)அவர்கள் பெருநாள் தொழுகையை பள்ளியில் தொழுததாக ஆதாரம் இல்லை. - அல் ஜன்னத் நவம்பர் 2002 பக்கம் 24,25

ஒருவர் மீது கொண்ட கோபத்தினால் அவர்களுக்கு அநீதி இழைக்க வேண்டாம் என்றுதான் இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஆனால், யாரோ சிலர் மீது நீங்கள் கொண்ட கோபத்திற்காக பெருமானார் (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டி பொய்யுரைத்துள்ளீர்கள். பித்தம் தலைக்கேறிய பித்தனைப்போல் முன்னுக்குப்பின் முரணாக முரண்டு பிடித்துள்ளீர்கள். உங்களது இவ்விரட்டை நிலை கண்டு ஏகத்துவ சிந்தனையுடைய பல சகோதரர்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறார்கள். அதையும்விட கூடுதலாக கீழ்கண்ட ஹதீஸை உங்களுக்கு எச்சரிக்கையாகவும் முன் வைக்கிறார்கள்.

'என் மீது இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது எவன் இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் நரகத்தில் நுழைவான்' என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: புஹாரி 106)

பெருமானார் (ஸல்) அவர்கள் பெருநாட்கள் தொழுகையை திடலில் தொழுதார்கள் என்று இருந்தால் அதை அப்படியே கண்மூடி நடைமுறை படுத்துவதுதான் ஒரு நம்பிக்கையாளனின் கடமை. அதுவிடுத்து அப்பொழுது பள்ளி சிறியது அதனால்தான் அப்படி தொழுதார்கள் என்று சொல்வதற்கு ஜாக்கின் தலைவர் கமாலுத்தீன் அவர்களே! உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. உங்களுக்கு என்ன இறைவனிடம் இருந்து வஹியா வருகிறது? அல்லாஹ் அவனுடைய மார்க்க சட்டத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர நாடினால் அதை அவனுடைய தூதர்கள் வழியாகவே அதை நிறைவு செய்திருப்பான். அப்படியிருக்க, பள்ளியில் தொழ இடமில்லாததுதான் திடலில் இறைத்தூதர் தொழ காரணம் என்று நீங்கள் சொல்வதற்கு நீங்கள் என்ன இறுதித்தூதருக்கு பிறகு வந்த தூதரா என்ன?

ஜாக்கின் தலைவருக்குத்தான் இப்படி தலையில் ஒன்றும் இல்லை என்றால் அவருடைய வாலுகளுக்கும் இப்பொழுது ஏதோ நிகழ்ந்திருக்கிறது. ஏனெனில் அவர்களும் திடல் தொழுகை தேவையில்லை என்ற நிலைப்பாட்டிற்கு தள்ளிச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் முன்பு என்ன சொல்லியுள்ளனர் என்பதை இப்பொழுது உள்ள நிலையோடு ஒப்பிட்டுப்பார்த்து திருந்திக்கொள்ள வேண்டும்.

ஜாக்கின் மாநில பேச்சாளரும் புதுப்பேட்டை ஜாக் மர்கஸ் பொறுப்பாளருமான ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தௌஸி வெளியிடும் அஸ்ஸிராத் இதழிலிருந்து...

பெண்கள் உட்பட அனைவரும் கலந்து கொள்ளவேண்டும். அதுவும் மாதவிடாய் பெண்கள் கூட வந்துவிட வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுவதால் அனைவர் மீதும் கடமை என்பதை புரியலாம். மற்ற நேர தொழுகைகளை பள்ளிவாசலில் நாம் தொழுகிறோம். ஆனால் பெருநாட்கள் தொழுகையை மட்டும் திடலில் தொழுவது தான் நபிவழி.
- அஸ்ஸிராத் நவம்பர் 2004 பக்கம் 28,29

ஜாக்கின் மாநில பொது செயலாளர் அப்துல் காதர் உமரி எழுதி, வெளியிட்ட தொழுகை என்ற நூலிலிருந்து...

பெருநாள் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் திடலில் தொழுதுள்ளதால் பள்ளியில் தொழாமல் திடலில் தொழுவது சரியானதாகும்.

- அப்துல் காதர் உமரியின் 'தொழுகை' நூல் - பக்கம் 149

இதுபோன்ற விசயத்தில் எங்களுக்கு குர்ஆன், சுன்னா முக்கியமல்ல. நாங்கள் எங்கள் தலைவருக்குத்தான் கட்டுப்படுவோம் என்று இவர்கள் பிடிவாதமாக இருப்பார்களாயின் அவர்களை மறுமையை முன்னிருத்தி அச்சமூட்டி எச்சரிக்கிறோம். உங்கள் வாக்குகளுக்கு எதிராகவே நீங்கள் இருந்தால் இவ்வுலகத்திலும் நீங்கள் உங்களை கேவலப்படுத்திக் கொள்வீர்கள். அல்லாஹ்வுடைய தூதருடைய நடைமுறைக்கு எதிராக நீங்கள் இருப்பீர்களாயின் மறுமை நிலையை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:159-160)

ஜாக் அமைப்பினர் த.த.ஜ-வை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அவர்களுடைய செயல்பாடுகளை குர்ஆன், சுன்னாவிற்கு எதிராக அமைத்துக் கொள்வதனால்தான் அவர்கள் அதே காரணத்திற்காக கப்ரு வழிபாடு கூட கூடும் என்று சொல்லாமல் இருக்க இறைவனை பிரார்த்திப்போம் என்று ஏகத்துவம் இதழில் த.த.ஜ-வினர் எழுதியுள்ளனர். இவர்களுடைய செயல்பாடுகளை பார்க்கும்பொழுது இது ஒரு நியாயமான விமர்சனமாகத்தான் கருத முடிகிறது.

யார் எந்த அமைப்பில் இருந்தாலும் குர்ஆன், சுன்னா என்று வரும்பொழுது அதில் சமரசம் செய்து கொள்ளாமல் அதற்கு உயிரோட்டம் கொடுக்கக்கூடிய நன்மக்களாக அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் ஆக்கி அருள்வானாக என்று அனைவரும் பிரார்த்திப்போமாக!

-------------------------------------------------------------------------------------------------

குறிப்பு: இந்த விஷயத்தில் த.த.ஜ நபி வழிக்கு உயிரூட்டியிருப்பதனாலேயே அவர்கள் இதில் சரி காணப்படுகிறார்கள். அதனால் அவர்கள் செய்வது குர்ஆன், சுன்னாவிற்கு எதிராக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்பது பொருளல்ல.

No comments: