Sunday, April 5, 2009

ஸஹீஹ் புஹாரியை மறுக்கும் ஜாக்!

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ஜம்இயத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்(ஜாக்) அமைப்பின் மாநில தலைவர் கமாலுதீன் மதனி அவர்கள் வெளியிடும் அல்ஜன்னத் பத்திரிகையிருந்து ஒரு கேள்விபதில்

கேள்வி : செய்வினை உண்டா? எதனால் உண்டாகிறது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு செய்வினை செய்தது உண்மையா?                 அப்துல் அலீம் - அய்யம்பேட்டை, ரிழ்வான் - ஆளூர்

பதில் : செய்வினை - சூனியம் என்பது மனிதனில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு கலை, இதனால் மனித உள்ளத்தில் சஞ்சலத்தை தவிர வேறு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அதுவும் அல்லாஹ் நாடினால்தான் ஏற்படும் என்ற அடிப்படையைப் புரியவேண்டும்.

'உலகத்திலுள்ள ஆதிமுதல் கடைசிவரை உள்ள எல்லா மனித ஜின்களும் சேர்ந்து ஒரு மனிதனுக்கு தீங்கிழைக்க நாடி அல்லாஹ் அந்த மனிதனுக்கு நன்மையை நாடியிருந்தால் மக்களால் எந்த தீங்கிழைக்கவும் முடியாது'... என்று அல்லாஹ் கூறினான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (நூல் : புகாரி)

திருக்குர்ஆனின் 2 : 102 வசனத்திலும் அல்லாஹ் இவ்வாறுதான் கூறுகிறான்மேலும், 'சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான்' (20 : 69) என்றும் இறைவன் கூறுகிறான்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக புகாரியில் அன்னை ஆயிஷா(ரலி) வாயிலாக ஹதீஸ் ஒன்று இடம் பெறுகிறது. அதனால் நபி(ஸல்) அவர்களுக்கு பாதிப்புகள் ஒன்றும் ஏற்பட்டதாக ஒன்றும் அறிவிக்கப்படவில்லை. மேலும் அது இறைவனின் நாட்டப்படி சில படிப்பினைகளுக்கான ஒரு நிகழ்வாகவே இருக்கிறது.

1.சூனியம் மனதில் சிறு குழப்பத்தை தவிர வேறொன்றையும் ஏற்படுத்தாது.

2.இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் மனிதரே, இறைத்தன்மையோ வானவர்களின் தன்மையோ அவர்களுக்கு இல்லை. இறைத்தூதர் என்பதால் மட்டுமே மனிதர்களில் மேன்மையானவர் என்ற நிலையை பெற்றுள்ளார்.

3.எவருக்கேனும் சூனியம் செய்யப்பட்டாலும் அதை அவர் அறிந்து கொள்ள முடியாது. ஏனெனில் நபி(ஸல்)அவர்களுக்கே இறைவன்தான் அறிவிக்கிறான். எனவே நமக்கு சூனியம் செய்யப்பட்டிக்குமோ என்ற வீணான சந்தேகம் குழப்பம் தேவையற்றது.

அப்படியே ஒருவன் தனக்கு சூனியம் செய்யப்பட்டதாக கருதினாலும் இவ்வுலகில் அவனுக்கு யாரும் தீர்வையோ நலத்தையோ அளிக்க முடியாது. தாயத்துகள் கட்டுவதாலோ மந்திரிப்பதாலோ அது சரியாகாது. மாறாக இறைவசனங்களான நாஸ் மற்றும் ஃபலக் 113, 114 ஆகிய அத்தியாயங்களை ஓதிக்கொள்ள வேண்டும். என்பன போன்ற படிப்பினைகளை அந்நிகழ்வு நமக்கு தருவதால் சூனியம் இன்றைய சூழலில் யாருக்கும் எந்த தீங்கையும் ஏற்படுத்தாது என்பதை அறிக!

அல் ஜன்னத்    ஆகஸ்ட் 2003

//நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக புகாரியில் அன்னை ஆயிஷா(ரலி) வாயிலாக ஹதீஸ் ஒன்று இடம் பெறுகிறது. அதனால் நபி(ஸல்) அவர்களுக்கு பாதிப்புகள் ஒன்றும் ஏற்பட்டதாக ஒன்றும் அறிவிக்கப்படவில்லை.//

இது அல்ஜன்னத்தில் ஜாக் மாநில தலைவர் கமாலுதீன் மதனி அவர்கள் எழுதும் வாக்கு. ஆனால் நாம் புஹாரியை திறந்தால் பாதிக்கப்பட்டதாக ஏராளமான ஹதீஸ்கள் காணக் கிடைக்கின்றன.

3175. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரம்மையூட்டப்பட்டது

பகுதி 47          சூனியம் 88

அல்லாஹ் கூறினான்:

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிளவை உண்டு பண்ணக்கூடிய (சூனியத்)தை அவ்விருவரிடமிருந்து தெரிந்து கொண்டார்கள். அல்லாஹ்வின் நாட்டமின்றி (ந்தச் சூனியத்)தைக் கொண்டு எவருக்கும் அவர்கள் தீங்கிழைத்து விட முடியாது. தங்களுக்குப் பலனளிக்காத, தீங்கு தருகிறவற்றையே அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். (ந்தச் சூனியத்)தை விலைக்கு வாங்கிக் கொள்பவனுக்கு மறுமையில் எந்தப் பேறும் இல்லை என்பதை அவர்கள் உறுதியாக அறிந்தே இருந்தனர். (திருக்குர்ஆன் 02:102)

5763. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு 'பன}ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள்.

நான், 'இறைத்தூதர் அவர்களே! (ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான்' என்றார்கள்.

5765. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.

6063 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களுக்கு (சூனியம் செய்யப்பட்டதால்) அவர்கள் இன்னின்னவாறு நடந்துகொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்றுவந்து விட்டதாகப் பிரமையூட்டப்பட்டார்கள்.

6391. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிரம்மையூட்டப்பட்டது.

 இந்த அறிவிப்புக்களெல்லாம் பொய்யானவையா? என்பது நமது கேள்வி. தன்னுடைய கருத்தை திணிக்க வேண்டுமென்பதற்காக ஹதீஸையே இல்லை என்று கூறுவது மாபெரும் பாவமாகும். குர்ஆன் ஹதீஸூக்கு சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம், நம்முடைய விருப்பத்திற்கேற்ப குர்ஆன், ஹதீஸை வளைப்பதோ இருக்கின்ற வசனம் அல்லது ஹதீஸை மக்களுக்கு சொல்லாமல் மறைப்பதோ அநியாயமாகும்.

ஸஸீஹ் புஹாரியில் உள்ள ஹதீஸ்கள் நம்பகமானவை என்று அப்துல் காதர் உமரி கூறும்போது கமாலுதீன் மதனி அந்த ஹதீஸ்களை நிராகரிப்பது அல்லது திரித்து கூறுவது அல்லது ஹதீஸை மறைப்பது சரியான செயல் அல்ல.

இந்த விஷயத்தில் நமக்கு சில கேள்விகள் எழும் வேளையில், ஜாக் ஏதேனும் ஒரு முடிவை தான் எடுக்க வேண்டும்.

1.அப்துல் காதர் உமரி மொழி பெயர்த்ததில் தவறு ஏற்பட்டுள்ளதா?

2.மூல நூலான ஸஸீஹ் புஹாரியில் பிழை ஏற்பட்டுள்ளதா?

3.சூனியம் சம்பந்தமாக வரும் அந்த சில ஹதீஸ்களில் மட்டும் தவறு ஏற்பட்டுள்ளதா?

4.கமாலுதீன் மதனி கூறியது போல பாதிக்கப்படவில்லை என்பது தான் சரியா?

அப்துல் காதர் உமரி மொழி பெயர்த்ததில் தவறு ஏற்பட்டுள்ளது என்று கூற வாய்ப்பில்லை. ஏனெனில் ஜமாஅத்துல் உலமா மேற்பார்வையில் ரஹ்மத் அறக்கட்டளை மொழிபெயர்த்து வெளியிட்ட புஹாரி தமிழிலும் இதே கருத்து தான் கூறப்பட்டுள்ளன.

அன்பான சகோதர, சகோதரிகளே..! இந்த நபிமொழித் தொகுப்பின் மொழியாக்கத்திற்காக சகோதரர் அப்துல் காதிர் உமரி அவர்கள் மிகவும் பாடுபட்டுள்ளார்கள். இருப்பினும், கவனக் குறைவு மற்றும் மனிதன் என்ற ரீதியில் விடுபட்டுள்ள தவறுகள் ஏதுமிருப்பின் தயவு செய்து சுட்டிக் காட்டுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு முன்னுரையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதால் தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வார்கள்.

இரண்டாவதாக, ஸஹீஹுல் புகாரி என்றழைக்கப்படும் இந்த நபிமொழித் தொகுப்பில், சுன்னா என்றழைக்கப்படும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றைப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுன்னா என்றழைக்கப்படும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள, சொல், செயல் ஆகியவற்றின் தொகுப்பையே 'ஹதீஸ்' என்றும் அழைக்கப்படுகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்தவரான இமாம் புகாரீ (ரஹ்) அவர்களின் பெரும் முயற்சியின் காரணமாகத் தொகுக்கப்பட்டதே, இந்த நபி மொழித் தொகுப்பாகும். ஒவ்வொரு நபிமொழியும் மிகக் கவனத்துடன் குர்ஆனுடன் ஒப்பிடப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்பே தொகுக்கப்பட்டுள்ளது. ஸஹீஹுல் புகாரீ என்ற இந்த நபி மொழித் தொகுப்பானது, நபிமொழித் தொகுப்பு நூல்களிலேயே மிகவும் நம்பகத் தன்மை கொண்டதாகவும், மார்க்க அறிஞர் பெருமக்களின் ஏகோபித்த அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதும் இதன் தனிச்சிறப்பாகும்.

- இது நாம் கூறும் விளக்கமல்ல. ஜாக் பேச்சாளர்  அப்துல் காதர் உமரி ஸஹீஹ் புஹாரியை மொழிபெயர்த்து வெளியிட்ட போது அவரே கொடுத்த முன்னுரையாகும். எனவே இரண்டாவது கேள்வியிலும் நமக்கு சந்தேகமில்லை. அடித்துக் கொள்வதாக இருந்தால் ஒரே அமைப்பில் இருக்கும் உமரியும் மதனியும் தான் அடித்துக் கொள்ள வேண்டும். அல்லது வழக்கம் போல கொள்கையில் அட்ஜஸ்மென்ட் செய்தாலும் .கே.

ஜாக்கின் ஒரு பேச்சாளர் விரலசைப்பது நபி வழி என்பார், இன்னொருவரோ அது பித்அத் என்பார். கமாலுதீன் மதனியோ இரண்டும் சரி என்பார். ஒரு பேச்சாளர் குர்ஆனை எல்லோருக்கும் விளங்கும் என்று பேசுவார், கமாலுதீன் மதனியோ குர்ஆன் எல்லோருக்கும் விளங்காது, பதினாறு கலைகளை கற்றவர்களால் தான் விளங்க முடியும் என்பார். ஜாக் ஆதரவாளர்களோ இரண்டும் சரி என்பார்கள். ஒருவர் நபிகளாரை கனவில் காண முடியாது என்பார், இன்னொருவரோ நபிகளார்(ஸல்) சதக்கத்துல்லாஹ் அப்பாவின் கனவில் வந்து உமறு புலவரிடம் சீறா புராணம் எழுத சொன்னார்கள் என்பார். தலையாட்டிக்கூட்டமான ஜாக் ஆதரவாளர்களும் அப்படியா! என்று ஆச்சரியப்பட்டு போவார்கள். மேடையிலிருக்கும் இங்கிலீஸ் மௌலவி உட்பட உமரி, மதனி, முப்தி போன்ற மார்க்க அறிஞர்(?!)களெல்லாம் எந்த மறுப்பும் சொல்லாமல், யார் என்ன சொன்னா நமக்கென்ன? கூட்டம் நடத்தினோமா? அரபியில பேனர் வச்சோமா? ஃபோட்டோ எடுத்தோமா? அதை அரபு நாட்டுக்கு அனுப்புனோமான்னு இருப்பாங்க.

அடடா...விஷயம் தலைப்புக்கு வெளியில் போகுதே... சொல்ல ஆரம்பிச்சா தவ்ஹீத்வாதிகளுக்கு எதிராக ஜாக் செயல்பட்டதையும் கப்ரு வணங்கிகளுக்கு விசிறி வீசியதையும் அடுக்கிக் கொண்டே போகலாம். அவர்கள் தவறுகளை திருத்திக் கொள்ள அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம். இப்போது தலைப்புக்கு உள்ளே வருவோம்.

மூன்றாவது கேள்விக்கான பதிலும் இரண்டாவது கேள்விக்கான பதிலிலேயே அடங்கிவிடுகிறது என்றாலும் சில குறிப்பிட்ட ஹதீஸ்களை மட்டும் நிராகரிக்க ஜாக் கூறும் காரணம் என்ன? அவ்வாறு சில ஹதீஸ்களை புறந்தள்ளும் அளவு கோல் என்ன?

கடைசி கேள்விக்கான பதில் நம்மிடம் இல்லை. கமாலுதீன் மதனி ஸஹீஹ் புஹாரியை ஏன் நம்ப மறுக்கிறார் என்றோ அல்லது நபி(ஸல்) அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறும் பல ஹதீஸ்கள் புஹாரியில் இருக்கும் போது அவர் ஏன் அந்த ஹதீஸ்களை மக்களிடம் மறைக்கிறார் என்பதும் நமக்கு தெரியவில்லை.

அறியாமல் தவறு செய்திருப்பாரானால் இத்தகைய அநியாயத்தை செய்ததற்காக ஜாக் அமைப்பு அல்லாஹ்விடம் தவ்பா செய்வதோடு மக்களிடம் செய்த தவறை ஒப்புக் கொண்டு பரிகாரம் தேடவேண்டும்.

பெருநாள் தொழுகையை திடலில் தொழுவது தான் நபிவழி என்பதை வலியுறுத்திய ததஜ, அதை செயல்படுத்திக் காட்டிய போது ததஜவின் மீது கொண்ட கோபம் காரணமாக நபிகளார்(ஸல்) அவர்கள் கூறாததை சொந்த வியாக்கியானம் செய்து, ஹதீஸ்களையே மறுத்த ஜாக், பின்னர் திருந்தி, ததஜ செய்வது தான் சரி என விளங்கி அல்லது பிடிவாதத்தை கைவிட்டு பெருநாள் தொழுகையை திடலில் தொழுவது தான் சுன்னத் என்பதை அல் ஜன்னத் பத்திரிகையில் ஒப்புக் கொண்டதோடு கோட்டாறு அஷ்ரப் பள்ளியில் இதுகாலம் வரை பெருநாள் தொழுகை தொழுது கொண்டிருந்ததை மாற்றி, கடந்த பெருநாள் தொழுகையை திடலிலேயே வைத்தது. அல்ஹம்துலில்லாஹ்!

இது போன்று ஹதீஸை மறுத்த அல்லது றைத்த விஷயத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சி கமாலுதீன் மதனி தவ்பா செய்வாரெனில் இடைவெளி விலகி நெருக்கம் அதிகமாகும். இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையே இருக்கும் மனக்கசப்புகளை மறுமையை மனதில் கொண்டு களைந்து விடுவோமானால் நம்மிடையே ஒற்றுமை மலரும்.

1 comment:

Unknown said...

யோவ் அரச்ச மாவையே (ஜாக்கையே) அரக்காதய்ய புளிச்சுப் போச்சு அரசியல் சூடு புடிச்ச நேரத்துல எதயாச்சும் மாத்திப் போடுயா கஸ்மாளம்.